தமிழ்நாடு

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

“”மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்””==பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

அன்பர் சைவ சித்தாந்தம் அவர்கள் அன்பர் கலாரசிகன் கரிகாலன் அவர்களின் செய்தித்தாள் பகுதியை பகிர்ந்திருந்தார்.இதைப் பற்றி அறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள் என்ற குறிப்புடன்.

அந்த செய்தி இதுதான்.===

ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘ஓசோன் படலம் சேதமடைவது, சர்வதேச பிரச்னை’ என்று கூறியிருந்தது.

அந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடுமையாக சாடியது. மேலும், ”ஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு எப்போதிருந்து தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா? அதை முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்” என்று கூறியது.

எமது முக நூல் பக்கத்தில் ககோளம் – பூகோளம் பற்றி 11=10=2015 அன்று ஒரு பதிவினை பதிந்திருந்தேன் .மீண்டும் அந்த பதிவு உங்களுக்காக.

ககோளம் – பூகோளம்

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில்.
ககோளம் – பூகோளம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் 1568 ஆம் வருட வானவியல் தொடர்பான ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

ககோளம்
சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியத்தில்
அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி.
புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதிதிருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி
ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி
மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்
இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

நமது முன்னோர்களின் நுண்ணிய அறிவாற்றலை இதன் மூலம் அறியலாம்.

அ.நூருல்அமீன்,இராமநாதபுரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *