தமிழ்நாடு

புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக கவர்னர் அறிவுரை!

புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்- மாணவர்களுக்கு தமிழக கவர்னர் அறிவுரை அரியலூரில் புத்தக திருவிழாவை தமிழக கவர்னர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததார்.

சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கியுள்ளார்.
பெரம்பலூர்:
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா நடக்கிறது. அதனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தகங்கள் அறிவு வளர்ச்சிக்கு ஒரு பாலமாக உள்ளது என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு நிறைய புத்தங்களை படிக்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வத்தையும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் பெறலாம். மாணவர்கள் போதுமான ஞானத்தை பெறவும், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளவும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே நல்ல புத்தங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
புத்தக வாசிப்பு
மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை கைவிட்டு அந்த நேரத்தை நல்ல புத்தகங்களை தேடுவதற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதேப்போல் பெரம்பலூர் சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களுக்கு நற்பண்புகள் மிகமிக முக்கியம். எனது 5-வது வயதில் பள்ளி ஆசிரியர் கற்பித்த போதனைகள் எனது வாழ்வில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர் எனக்கு, நம்மை விட்டு பணம் சென்றால் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. உடல் நலம் பாதித்தால் அதன் பாதிப்பை ஓரளவு சரி செய்ய முடியும். நற்பண்புகளை இழந்தால் அனைத்தையும் இழந்தவராகிவிடுவோம் என்றார். அந்த அளவுக்கு நம் வாழ்வில் நற்பண்புகள் மிக முக்கியமாக பங்காற்றுகின்றன. அனைவருக்கும் நேர மேலாண்மை மிகவும் முக்கியம்.
நம்வாழ்வில் சிறப்புற மகாத்மா காந்தியின் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மிக எளிமையான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை தேவை. இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என யாராக இருந்தாலும் அவரவர் வேத நூல்கள் அவர்களுக்கு போதித்தவாறு வாழ வேண்டும். கடவுள் நம்பிக்கை கொண்டவரால் தவறு மற்றும் குற்றம் செய்ய மனம் வராது.
நேர மேலாண்மையை முறையாக கையாள வேண்டும். மாணவர்கள் ஒரு நாளைக்கு 6 மணிநேரத்தை கால அட்டவணைப்படி செலவழிக்கின்றனர். அதே சமயம், மீதமுள்ள 18 மணி நேரத்தை முறையாக செலவழிப்பது குறித்தும் திட்டமிட வேண்டும்.
ஒரு நாள் முழுவதற்குமான கால அட்டவணையை தயாரித்து அதன்படி நேரத்தை முறையாக செலவழிக்க வேண்டும். ஏனெனில் காலம் விலை மதிப்பில்லாதது. ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கு மரியாதை கொடுத்து கீழ்படிந்து நடக்க வேண்டும். பிறருக்கு போதனை செய்யும் முன்பு அதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *