உலக செய்திகள்

தொகுப்பூதியத்தை உயர்த்தி பணிநிரந்தரம் செய்க.பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

தொகுப்பூதியத்தை உயர்த்தி பணிநிரந்தரம் செய்க :-பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்:-
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-
பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வேதனை மிகுந்த குரல்களுடன் பல வருடங்களாக தமிழகத்தில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறதே தவிர? எங்களுக்கு ஏதேனும் விடிவுகாலம் பிறந்ததா? பிறக்குமா? போன்ற கேள்விகளுடன் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் படும் சிரமங்களும் வேதனைகளும் கேட்பவர்களுக்கே வேதனையாக இருக்கிறது. அரசு எங்களின் கோரிக்கையை செவி சாய்த்து எங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011 – 2012 கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டனர்.
பணிநியமனத்தின்போது தரப்பட்ட 5ஆயிரம் சம்பளத்தை ரூ.2ஆயிரம் உயர்த்தி 2014ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகையோடு வழங்கினார். இதனால் சம்பளம் ரூ.7ஆயிரம் என உயர்ந்ததோடு அனைவருக்கும் 12ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது.
பின்னர் 14வது சட்டசபை காலம் முடிந்து தொடர்ந்து 15வது சட்டசபையிலும் ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா துரதிஷ்டவசமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதனை அடுத்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு ஆகஸ்டில் தொகுப்பூதியத்தை ரூபாய் 700 மட்டுமே உயர்த்தினார்.
முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒரேடியாக ரூ.2ஆயிரம் உயர்த்தி ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகையோடு கொடுத்ததுபோல இம்முறை கொடுக்கப்படவில்லை. இதனால் சம்பளம் மட்டும் ரூ.7ஆயிரத்து 700 ஆனது.
ஆனால் ஒட்டுமொத்தத்தில் கடந்த 8 ஆண்டுகளில் சம்பள உயர்வாக தரப்பட்ட ரூபாய் 2 ஆயிரத்து 700 மிகவும் குறைவானதாகும். கடைசியாக ஊதியம் உயர்த்தி 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே புதிய சம்பள உயர்வு குறித்து அரசும் அதிகாரிகளும் அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.
ரூபாய் 7ஆயிரத்து 700 குறைந்த சம்பளத்தில் 9 கல்விஆண்டுகளாக பணிபுரியும் எங்களுக்கு உதவிடும்வகையில் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீதம் புதிய சம்பள உயர்வு அமுல்படுத்தி இருக்கலாம்.
தற்போது ஒருபள்ளியில் வேலைபார்க்கும் எங்களுக்கு கூடுதலாக பள்ளிகளை வழங்கி சம்பளம் உயர்வுக்கு வழிவகுத்து இருக்கலாம்.
ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்களைப்போல ரூபாய் 14 ஆயிரத்து 203 சம்பளம் கொடுத்து இருக்கலாம்.
ஆனால் சம்பள உயர்வு குறித்து கவனம் செலுத்தாமல் கல்வித்துறையினர் மௌனம் காத்துவருவது தொகுப்பூதியத்தில் இருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
தொகுப்பூதியத்தை உயர்த்தாமல் உள்ளபோது இத்திட்டத்தினை மேம்படுத்தி சம்பள உயர்வுக்கு வழிகண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
. இதுஒருபுறமிருக்க தமிழகம் முழுவதும் ஒரேநாளில் நாங்கள் மாதச்சம்பளம் பெற்ற வரலாறே இல்லை. எனவே எங்களுக்கு தற்போது பள்ளிமேலாண்மைக்குழுவால் வழங்கப்படும் சம்பள முறையை மாற்றி பள்ளி ஆசிரியர்களுடன் இணைத்து எங்களின் சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே ஒரே தேதியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழகம் முழுவதும் கிடைக்கும். எங்களின் வருகைப்பதிவேடும் பள்ளி ஆசிரியர்களுடன் ஒன்றாகவே பராமரிக்கப்படவேண்டும். இப்போது திட்டங்கள் ஒருங்கிணைப்படுகிறது. பள்ளிகளும் ஒருங்கிணைப்படுகிறது. பகுதிநேர ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்படாமல் அனைவருடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இந்த நிலையில் மருத்துவ விடுப்பு, மகப்பேறு காலவிடுப்பு உள்ளிட்ட விடுப்பு சலுகைகளும் வழங்காமல் உள்ளனர். இதனால் எதிர்பாராத விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் பள்ளி செல்ல முடியாமல் விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு ஊதிய இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே அரசும் அதிகாரிகளும் உடனடியாக விடுப்பு சலுகைகளை வழங்க முன்வந்தால் மட்டுமே இனிவருங்காலங்களில் முழு சம்பளம் பெற முடியும்.
கடந்த 8 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் தரவில்லை, போனஸ் கிடையாது. P.F E.S.I இல்லை. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கும், 58 வயதாகி பணிஓய்வில் சென்றவர்களுக்கும் அரசு குடும்பநலநிதி தரவில்லை. இந்த நிலையிலும் ஜாக்டோஜியோ வேலைநிறுத்த நாட்களில் அரசின் உத்தரவுபடி பள்ளிகளை திறந்து நடத்தி வருகிறோம். தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி திட்டவேலையில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட எங்களின் பணியிடங்களை நிரந்தரப்படுத்தி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன்கருதி வாழ்வாதாரம் காத்திட கல்வி அமைச்சரும், முதல்வரும் மனிதநேயத்துடன் புதிய அரசாணை பிறப்பித்து அவரவர் பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *