இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது புலியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்டோர் சீனா நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவி 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தது. இதனால் சீனாவில் வேலை பார்த்து வந்த திருவாடானை அருகே உள்ள புலியூர், வெள்ளையாபுரம், பழங்குளம், வில்லாரேந்தல் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு பயந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதில் புலியூர் கிராமத்தை சேர்ந்த ராஜாராம், முருகானந்தம், தியாகு, அழகுதிருநாவுக்கரசு ஆகியோரிடம் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் சீனாவில் சங்காய் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறோம். கொரோனா வைரஸ் நோய் உகன்டா மாநிலத்தில் தான் பரவி உள்ளது. இது நாங்கள் இருக்கும் மாநிலத்தில் இருந்து 1000 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது 7ம் அறிவு திரைப்படத்தில் வரும் காட்சி போல் இருக்கிறது. இந்த வைரஸ் நோய் எதனால் பரவி வருகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது சீனாவில் உணவு சரிவர கிடைக்கவில்லை. ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு செல்ல சீனா அரசு தடை விதித்துள்ளது. எங்கள் ஊரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளோம். எங்களில் யாருக்கும் வைரஸ் நோய் தாக்கம் இல்லை. ஆனாலும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை செய்ய எங்களை வரச் சொல்லியுள்ளார்கள். தற்போது சீனாவில் சீன வருடப்பிறப்பு 10 நாட்கள் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படும் வருடபிறப்பு வைரஸ் நோய் தாக்கத்தால் கொண்டாடப்படவில்லை. சீனா தெருக்களில் மனிதர்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

