தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

இராமநாதபுரம்,ஜீன்.23:-

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கமுதி ஒன்றியம் சார்பில் அதன் தலைவர் பெரியசாமித்தேவர்,தலைமையில்,செயலாளர் நாகரெத்தினம்,பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ,வீர ராகவராவிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

MGNREGS திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை செயல்படுத்துதல்,ஒப்பந்தப்புள்ளி கோருதல்,போன்றவற்றில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுதல்,மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக பெறப்படும் பொய் புகார்களுக்காக நோட்டீஸ் அனுப்புதல் போன்ற பஞ்சாயத் ராஜ் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும்,கடந்த மூன்றரை ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் ஊராட்சி நிர்வாகம் தனி அலுவலர்கள் மூலம் நடைபெற்று வந்தது. தனி அலுவலர் காலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம்,14-வது நிதிக்குழு மானிய நிதி உள்ளிட்ட மத்திய,மாநில அரசுகளின் திட்டங்களில் பணிகள் தேர்வு செய்தல்,ஒப்பந்தபுள்ளி கோருதல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த கிராம ஊராட்சிகள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு,பேக்கேஜ் முறையில் டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.தற்பொழுது அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும்,ஊராட்சித்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.தனி அலுவலர்கள் பதவி காலாவதியாகி விட்டது எனினும்,தனி அலுவலர் காலத்தில் பின்பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள்,அப்படியே இன்னும் தொடர்ந்து வருவதோடு,1994-ம் ஆண்டு பஞ்சாயத் ராஜ் சட்டம் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கிய அதிகாரங்கள்,உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது,மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.MGNREGS திட்டத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து வகையான பதிவேடுகளிலும் கிராம ஊராட்சித்தலைவர்கள் கையொப்பமிடுவதெற்கென தனிப்பட்ட இடம் இருக்கும் ஆனால் தற்பொழுது கிராம ஊராட்சி தலைவர்களுக்கு MGNREGS திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களில் கையொப்பமிடும் அதிகாரம் இல்லாததால் உரிய முறையில் பணிகளை மேற்க்கொள்வதில் சிரமமாக உள்ளது.கையொப்பம் தேவையில்லை என்பதால் கிராம ஊராட்சித்தலைவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லையென்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலக அலுவலர்கள் கூறி வருகின்றனர்.கடந்த காலங்களில் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆதாரங்களைக் கொண்டு பணிகள் தேர்வு செய்தல்,டெண்டர் விடுதல்,செயல்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள் மூலமே செய்யப்பட்டு வந்தது.ஆனால் 1994-ம் ஆண்டு பஞ்சாயத் ராஜ் சட்டம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதிகாரங்களை பறிக்கின்ற வகையில் ஊராட்சி கணக்குகளில் உள்ள 14-வது நிதிக்குழு மானியநிதி,திட்டநிதி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் செய்யப்படும் ஊரணி மேம்பாடு,சாலைமேம்பாடு போன்ற பணிகளுக்கான டெண்டர் மாவட்ட வளர்ச்சி முகமை மூலம் பேக்கேஜ் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் கிராம ஊராட்சித்தலைவர்களுக்கான அதிகாரம் பறிக்கப்படுவதோடு,டெண்டர் விடுவதிலும் பணிகள் மேற்கொள்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பாக அமையக்கூடும்.மேலும் பல்வேறு ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக பெறப்பட்டு வரும் பொய்யான புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற பெயரில் விளக்க நோட்டீஸ் அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானதாக அமைந்து விடும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சித்தலைவர்கள் மீது எந்தவித முகாந்திரமுமின்றி நோட்டீஸ் அனுப்புவது,பதவியை விட்டு நீக்கிவிடுவதாக மிரட்டுவது,போன்ற நிகழ்வுகள் நமது மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகவே நாங்கள் கருதுகிறோம்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித்தலைவர்களின் உரிய மாண்பும்,மரியாதையும் காக்கப்படவேண்டியதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஆகவே தங்களின் சமூகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம்,14-வது நிதிக்குழு மானியம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கென நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் பணிகள் தேர்வு செய்தல்,டெண்டர் விடுதல்,போன்ற பணிகளை அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் அனைத்து ஊராட்சித்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்:✒,அ.நூருல்அமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *