தமிழ்நாடு

மணப்பாறையில் திடீர் மழை!விவசாயிகள் மகிழ்ச்சி!

நமதுசெய்தியாளர்:அ.நூருல்அமீன்.

மணப்பாறை: மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் கண்ணூத்து அணை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீரில் இறங்கி விவசாயிகள், இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். அக்னி நட்சத்திரம் முடிந்தும் இந்த வெயிலின் வெப்ப அளவு குறைந்தபாடில்லை. காலையில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலையில் இதன் சூழ்நிலை மாறி நேற்று மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை ஒரே சீராக பெய்ததால் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பாதசாரிகள் நனைந்தபடி சென்றனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்ப ஏற்பட்டது. மேலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மழை பெய்த பகுதிகளில் காணப்பட்டது. இந்த திடீர் மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல கிராமப் பகுதிகளின் பல இடங்களில் இந்த மழை குறை வைக்காமல் பெய்தது. கடந்த 10 ஆண்டுகளாக மழையின்றி கண்ணூத்து அணை வறண்டு கிடந்தது. இதனால் அப்பகுதி விவசாய நிலங்களும் வறண்ட நிலையில் இருந்தன. இந்நிலையில் மணப்பாறை, எளமனம், கண்ணூத்து, குளத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது.

அப்போது கண்ணூத்து அணைக்கு வரக்கூடிய ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 10 ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் அந்த ஓடையில் இறங்கி உற்சாக கூக்குரலிட்டு மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார் நத்தம் பகுதியில் பெய்த கன மழையால் கண்ணூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நேற்று பெய்த திடீர் மழை விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *